குர்ஆன் மற்றும் நபிமொழிகளின்
நிழலில், ஒவ்வோர் பெண்ணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.
மனைவியின் அழகிய வரவேற்பு
பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள்
கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால்
உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது
வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள்
(கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத்
தவிர வேறு எந்த ஆணிடமும் – குறிப்பாக – மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
உங்கள் கணவரிடத்தில் “உம்!! இல்லை!!” என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்
நறுமணமும் அலங்கரிப்பும்
உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு
வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும்.
இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).
உங்கள் கணவரோடு தனித்திருக்கும்
வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக
மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான
ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).
தடுக்கப்பட்ட முறையில் அதாவது
ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல்,
ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).
கணவனுக்குப் பிடித்தமான வாசனைத்
திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.
முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள்.
இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு (திருமணம் முடிக்க தடை இல்லாத ஆண்களிடம்) வெளிப்படுத்துவது
ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: “அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?” அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“எந்தப் பெண் தன் கணவன்தன்னைப்
பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ,
தன் விஷயத்திலும் தன்னுடைய
பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே,
அனைவரையும் விடச்சிறந்தவள்”
( நஸயீ).
அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது
உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள்.
(பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு
உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).
ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை
இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின்
முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல,
மறுமையின் சுகவாழ்வுக்கு
எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.
உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும்
கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்
அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்
வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப
உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே
உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன்
18:46).
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக
அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்
உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும்
உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்
உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் “இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?” என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”
உறுதுணையும் உதவியும்
உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில்
நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும்
உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் ‘தோள்’ கொடுங்கள்
கட்டுப்படுதல்
ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு
நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன்
கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக
வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்
(தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).
“ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக்
கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்” என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).
கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் – அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது
ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில்
கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.