பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும்
போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக்
கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது.
நீங்கள் பொறாமைக்காறராக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே
கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும்
போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும்.
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது
பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும்,
மகிமையையும் குறைக்கும்
வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை
சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள்.
மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்பவன் எப்படி புத்திசாலியாக
இருக்க முடியும்?
எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை
மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி,
புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக்
கொள்ள முயற்சி செய்யுங்கள்.